நீர்பிரம்மி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.
இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது
. Tamil - Neer brammi English - Thyme leaved gratilo Malayalam - Neer brahmi Telugu - Sambrani chetta Sanskrit - Brahmi Botanical Name - Bacopa monnieri
நீர்பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bacoside B ஆகிய குளுக்கோசைடுகளும் உள்ளன.
நினைவாற்றலைத் தூண்ட:
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு பெரும்பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச் சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
நரம்புத் தளர்வு நீங்க:
மூளையை தலைமையிடமாகக் கொண்டு உடலெங்கும் பின்னிப் பிணைந்து காணப்படும் நரம்புகள்தான் மனித செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாகின்றன. இந்த மெல்லிய நரம்புகளில் சில சமயங்களில் மன அழுத்தம், கோபம் காரணமாக ஆங்காங்கு நீர் கோர்த்துக்கொள்ளும். மேலும் வெப்பப் பகுதியில் வேலை செய்பவர்களின் நரம்புகளும் பாதிக்கப்படும். நரம்புகள் பலமாக இருந்தால்தான் உடல் புத்துணர்வுடன் செயல்படும். இத்தகைய நரம்பு தளர்வு நீங்க பிரம்மி இலைகளை உலர்த்தி கசாயம் செய்து அருந்திவருவது நல்லது.
சிறுநீர் பெருக:
ஒரு மனிதன் ஆரோக்கியமாக செயல்பட அவன் தினமும் 3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். அதுபோல் அவன் தினமும் 1 லிட்டர் முதல் 1 1/2 லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். சிறுநீர் சீராக வெளியேறினால் தான் உடலில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். இவை வெளியேறாமல் நின்றுவிட்டால் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல் நீர் எரிச்சல் உண்டாகும். இவர்கள் நீர்ப்பிரம்மி இலைகளை கசாயம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
மலச்சிக்கல் நீங்க:
மலச்சிக்கல், மனச்சிக்கல் ஆதி நோய்கள். மலச்சிக்கலைப் போக்கினாலே உடல் ஆரோக்கியம் பெறும். சிலருக்கு எளிதில் செரிமானமாகக்கூடிய உணவு சாப்பிட்டாலும் மலம் எளிதில் வெளியேறாது. இவர்கள் நீர்பிரம்மி இலைகளை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும். நீர்பிரம்மி இலைகளை சாறு பிழிந்து நெய் சேர்த்து காய்ச்சி கொடுத்து வருதல் நல்லது அல்லது நீர்பிரம்மி சாறுடன் 8 கிராம் கோஷ்டத்தை பொடித்து சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் புளிச்ச ஏப்பம் நீங்கும்.
நல்ல குரல்வளம் கிடைக்க:
நீர்பிரம்மி இலைகளை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக் கம்மல் தீருவதுடன் நல்ல குரல்வளம் கிடைக்கும். உச்சரிப்பு சரிவராத குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம். இதன் வேரை அரைத்துக் கொதிக்க வைத்து நெஞ்சில் பூச கோழைக்கட்டு நீங்கும். நீர்பிரம்மி இலைகளை சிற்றாமணக்கெண்ணெய் விட்டு வதக்கி, வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு அதையே அவ்வீக்கங்களின் மீது வைத்துக் கட்டிவர வீக்கங்கள் கரையும். நீர்பிரம்மியை பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியத்தைப் பெறுவோம்.
No comments:
Post a Comment